November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்–19 விதிமுறை மீறல்; ஆர்ஜென்டினா-பிரேசில் கால்பந்து போட்டி இடைநிறுத்தம்

பிரேசில் மற்றும் ஆர்ஜென்டினா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில், வீரர்கள் கொரோனா விதிகளை மீறியதாக கூறி சுகாதாரத்துறை அதிகாரிகள், மைதானத்தினுள் நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

ஆர்ஜென்டினாவுக்கும் பிரேசிலுக்கும் இடையில் நேற்று (05) நடைபெற்ற கத்தார் 2022 பீபா உலகக் கிண்ண தென் அமெரிக்க வலய தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டி ஆரம்பித்து 5 நிமிடங்களில் நிறுத்தப்பட்டது.

சாஓ பாவ்லோ விளையாட்டரங்கில் ஆரம்பமான இப் போட்டியில் பங்குபற்றிய ஆர்ஜென்டினா வீரர்கள் சிலர் கொவிட் – 19 விதிமுறைகளை பின்பற்ற தவறியதாக சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்தே போட்டி இடைநிறுத்தப்பட்டது.

போட்டி ஆரம்பித்து ஒரு சில நிமிடங்களில் பிரேசில் நாட்டின் சுகாதார அதிகாரிகள் மைதானத்துக்குள் திடீரென புகுந்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் இரண்டு அணிகளினது அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்தில் கழக மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வரும் ஆர்ஜென்டினாவின் நான்கு வீரர்கள், கொவிட் – 19 விதிமுறைகளுக்கு அமைய உடனடியாக தனிமைப்படுத்தப்படவேண்டும் என பிரேசிலின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதில் இங்கிலாந்தில் இருந்து வருகை தரும் வீரர்கள், கட்டாய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும் என பிரேசில் அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், ஆர்ஜென்டினா வீரர்கள், இங்கிலாந்திலிருந்து வருகை தந்ததை மறைத்து, போட்டியில் விளையாடுவதற்கு தயாராகியதாக குற்றஞ் சாட்டப்பட்டது.

குறித்த வீரர்களின் பெயர்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத போதும், இங்கிலாந்து பிரீமியர் லீக்கில் விளையாடிவரும், எமிலியானோ பியூண்டியா, எமிலியானோ மார்டினஸ், ஜியோவானி லோ செல்ஸோ மற்றும் கிரிஸ்டியன் ரெமேரியோ ஆகியோர் இவ்வாறு விதிமுறையை மீறியிருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், போட்டி மத்தியஸ்தர்களின் தீர்மானத்துக்கு அமைய ஆர்ஜென்டினாவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டி நிறுத்தப்பட்டதை உறுதி செய்வதாக பீபா தெரிவித்தது. இது தொடர்பாக விரைவில் விபரங்கள் அறிவிக்கப்படும் என பீபா தெரிவித்துள்ளது.

அதேநேரம், ஆர்ஜென்டினா அணி நாடு திரும்பி எதிர்வரும் 10 ஆம் திகதி பொலியாவுடனான தகுதிகாண் போட்டியில் விளையாடவுள்ளது.இதன் காரணமாக கைவிடப்பட்ட ஆர்ஜென்டீனா – பிரேசில் போட்டி எப்போது நடைபெறும் என்பது அறிவிக்கப்படவில்லை.