July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்; பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு

Photo: PCB Twitter

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இன்று (06) அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் அசாம் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிரேஷ்ட வீரர்களான சொஹைப் மலிக் மற்றும் சர்பராஸ் அஹமட் ஆகிய இருவரும் இடம்பெறவில்லை.

ஆசிப் அலி, குஷ்தில் ஷா ஆகிய இருவரும் டி-20 உலகக் கிண்ணம் மற்றும் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20 தொடர்களில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

லாகூரில் செப்டம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிராகவும் ஒக்டோபர் 13, 14 ஆம் திகதிகளில் 2 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராகவும் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது.

இதனையடுத்து, டி-20 உலகக் கிண்ணத்தில் ஒக்டோபர் 24 ஆம் திகதி தனது முதல் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது

ஐ.சி.சி.யின் 7 ஆவது டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஒக்டோபர் 24 ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி விபரம்:

பாபர் அசாம் (அணித் தலைவர்), சதாப் கான் (உப தலைவர்), ஆசிப் அலி அஸாம் கான் (விக்கெட் காப்பாளர்), ஹாரிஸ் ரவூப், ஹசன் அலி, இமாத் வசீம், குஷ்தில் ஷா, மொஹமட் ஹபீஸ், மொஹமட் ஹஸ்னைன், மொஹமட் நவாஸ், மொஹமட் ரிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), மொஹமட் வசீம் ஜூனியர், ஷஹீன் ஷா அப்ரிடி, சொஹைப் மக்சூத்

மேலதிக வீரர்கள்: பகார் ஜமான், ஷாநவாஸ் தானி மற்றும் உஸ்மான் காதர்