
Photo: Twitter/ selecaoportugal
ஆண்களுக்கான சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் போட்டவர் என்ற புதிய சாதனையை போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ நிலைநாட்டியுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2022 பீபா உலகக் கிண்ண ஏ குழுவுக்கான தகுதிகாண் போட்டியில், 2 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் போர்த்துக்கல் அணி வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியின் 89 ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் போட்டு, அதிக கோல்கள் போட்ட வீரர் என்ற உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இப்போட்டியில் ஒரு கோல் பின்னிலையில் இருந்த போர்த்துக்கல் சார்பாக அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 89 ஆவது மற்றும் 90 ஆவது நிமிடங்களில் கொல்களைப் போட்டு, அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
இந்த இரண்டு கோல்களும் சர்வதேச அரங்கில் அவரது 110 ஆவது, 111 ஆவது கோல்களாக அமைந்தன.
இதன்மூலம் ஈரான் சார்பாக 109 சர்வதேச கோல்களைப் போட்டிருந்த அலி தாயின் உலக சாதனையை தனது 180ஆவது சர்வதேச போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முறியடித்து, புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரரானார்.
சர்வதேச கால்பந்து அரங்கில் இருபாலாரிலும் அதிக கோல்களைப் போட்டுள்ளவர் கனடாவின் கிறிஸ்டின் சின்க்ளயார் என்ற வீராங்கனையாவார். இவர் 187 கோல்களைப் போட்டுள்ளார்.