January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாராலிம்பிக் பதக்கம் வென்ற தினேஷ், சமித்தவுக்கு பணப்பரிசு அறிவிப்பு

டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற இலங்கை வீரர்கள் இருவருக்கும் பணப்பரிசு வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ பராலிம்பிக்கில், 2021 ஆகஸ்ட் 30ஆம் திகதியன்று காலை தினேஷ் பிரியன்த ஹேரத், ஈட்டி எறிதலில் இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்து வரலாற்று சாதனை படைத்தார்.

அவரது சகாவான சமித்த துலான் கொடிதுவக்கு அதே தினத்தன்று மாலையில் F64 ஈட்டி எறிதல் போட்டியில் 65.61 மீற்றர் என்ற தனது தனிப்பட்ட அதிசிறந்த தூரப் பெறுதியுடன் வெண்கலப் பதக்கதை வென்றார்.

இந்த நிலையில், டோக்கியோ பராலிம்பிக்கின் ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதலில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்த தினேஷ் பிரியன்தவுக்கு 5 கோடி ரூபா பரிசுத்தொகை வழங்குவதற்கு விளையாட்டுத் துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஆண்களுக்கான F64 ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சமித்த துலானுக்கு 2 கோடி ரூபா பரிசுத் தொகை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின்னர் இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் அமல் எதிர்சூரிய தெரிவித்தார்.

இதன்படி, குறித்த இரண்டு வீரர்களும் எதிர்வரும் 7ஆம் திகதி நாடு திரும்பவுள்ள நிலையில், அவர்களுக்கு விமானநிலையத்தில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சு வரை விசேட வரவேற்பளிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.