சர்வதேச கிரிக்கெட் பேரவை டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசையை இன்று (01) வெளியிட்டுள்ளது.
இதன்படி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசையில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை பின்தள்ளி இங்கிலாந்து டெஸ்ட் அணித் தலைவர் ஜோ ரூட் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஜோ ரூட் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்திய அணிக்கு எதிராக தொடர்ந்து 3 சதங்களை அடித்ததன் மூலம் தரவரிசையில் இந்த உயர்வை ரூட் பெற்றுள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடர் தொடங்கும்போது தரவரிசையில் 5 ஆவது இடத்தில் இருந்த ரூட், 3 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 507 ஓட்டங்களை குவித்து முதலிடத்தை பிடித்துள்ளார்.
கேன் வில்லியம்சன் இரண்டாவது இடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் மூன்றாவது இடத்திலும், மார்னஸ் லபுசேன் நான்காவது இடத்திலும் காணப்படுகின்றனர்.
ஐந்தாவது இடத்திற்கு ரோகித் சர்மா முன்னேற, ஆறாவது இடத்திற்கு விராட் கோலி பின்தள்ளப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஜேம்ஸ் அண்டர்சன் ஒரு இடம் முன்னேறி 5 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.