October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியன் கபடி லீக்: இலங்கை வீரர் அன்வர் தமிழ் தலைவாஸ் அணிக்கு ஒப்பந்தம்

இந்தியன் ப்ரோ கபடி பிரீமியர் லீக்கின் வீரர்களுக்கான ஏலத்தில் முதல் முறையாக இலங்கையைச் சேர்ந்த அன்வர் சஹீப் பாபா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

12 அணிகள் பங்கேற்கும் 8ஆவது இந்தியன் ப்ரோ கபடி பிரீமியர் லீக் தொடர் (Pro Kabaddi League) எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், இம்முறை கபடி லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று இடம்பெற்றது.

இம்முறை ஏலத்தில் இலங்கையுடன் சேர்த்து ஒன்பது நாடுகளிலிருந்து ஒட்டுமொத்தமாக 42 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

ஈரானிலிருந்து 14 வீரர்களும், பங்களாதேஷிலிருந்து 8 வீரர்களும், கென்யாவிலிருந்து 7 வீரர்களும், இலங்கையிலிருந்து 4 வீரர்களும், தென் கொரியாவிலிருந்து 3 வீரர்களும், நேபாளத்திலிருந்து 2 வீரர்களும், ஜப்பான் மற்றும் தாய்லாந்திலிருந்து தலா ஒருவருமாக வெளிநாட்டு வீரர்களுக்கான இந்த ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

இதன்படி, இம்முறை வீரர்களுக்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த அன்வர் சஹீப், லஹிரு குருப்பு, ஆசிரி சந்தருவன் மற்றும் நிந்தவூரைச் சேர்ந்த அஸ்லம் சஜா ஆகிய இலங்கை வீரர்கள் இடம் பெற்றனர்.

இதனிடையே, வீரர்களுக்கான முதல்கட்ட ஏலத்தில் இலங்கை வீரர் அன்வர் சஹீட்டை தமிழ் தலைவாஸ் அணி இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இது இலங்கை பணப்பெறுமதியில் 27 இலட்சம் ரூபாவாகும்.

இதன்மூலம், இந்தியன் கபடி பிரீமியர் லீக்கில் வீரர்களுக்கான ஏலத்தின் மூலம் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டார்.

எம்பிலிபிட்டியவைப் பிறப்பிடமாகக் கொண்ட 25 வயதான அன்வர் சஹீப், இலங்கை கடற்படையைச் சேர்ந்த வீரர் ஆவார்.

இலங்கை தேசிய கபடி அணிக்காக இதுவரை விளையாடாத இவர், தெற்காசிய மற்றும் ஆசிய விளையாட்டு விழாவுக்கான இலங்கை கபடி அணியில் இடம்பெற்றிருந்தார்.

இது இவ்வாறிருக்க, ஏனைய மூன்று இலங்கை வீரர்களையும் எந்தவொரு அணியும் முதல்கட்ட ஏலத்தில் எடுக்கவில்லை. குறித்த மூன்று வீரர்களும் இலங்கை தேசிய கபடி அணிக்காக விளையாடியவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சுமார் 3 மாதங்களுக்கு நடைபெறும் இத்தொடரின் இறுதிப் போட்டி அடுத்தாண்டு பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.