இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அடுத்த மாதம் மாலைதீவுகளில் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கான அணி விபரத்தை வெளியிட்டுள்ளது.
தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடர் மாலைதீவுகளின் மாலே நகரில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை போட்டித் தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகள் பங்குபற்றவுள்ளன.
இந்த நிலையில், குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கால்பந்து அணி விபரத்தை இலங்கை கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
28 பேர் கொண்ட உத்தேச அணியில் ஏராளமான தமிழ் பேசுகின்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன்படி, இலங்கை கால்பந்து அணியின் தலைவராக கோல் காப்பாளர் சுஜான் பெரேரா செயல்படவுள்ளார்.
அனுபவமிக்க வீரர்களைப் போல பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்தக் குழாத்தில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதில் நியூ யங்ஸ கழகத்துக்காக விளையாடிவரும் டக்சன் பியுஸ்லஸ் மற்றும் ரினௌன் கழகத்துக்காக விளையாடிவரும் ஜூட் சுபன் ஆகிய இருவரும் இலங்கை கால்பந்து குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
குறித்த இரண்டு வீரர்களும் இறுதியாக தென் கொரியாவில் நடைபெற்ற 2022 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான இரண்டாம் சுற்று தகுதிகாண் போட்டிகளுக்கான இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இங்கிலாந்து கழகங்களுக்காக கால்பந்து விளையாடிவரும் வீரர்களான மார்வின் ஹமில்டன் மற்றும் டிலன் டி சில்வா இருவரது பெயர்களும் இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ளது.