January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிளேஓப் வாய்ப்பை தக்க வைக்குமா ராஜஸ்தான்? சன்ரைசஸுடன் இன்று பலப்பரீட்சை

Photo:BCCI/IPL

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஸ்டீவன் ஸ்மித்தின் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டேவிட் வோனரின் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகள் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மோதுகின்றன.

அணித்தலைவர்கள் இருவருமே அவுஸ்திரேலியர்கள் என்பது சிறப்பம்சமாகும்.

ஆனால், இரண்டு அணிகளுமே வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அணித்தலைவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆற்றலை வெளிப்படுத்தியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வருட ஐபிஎல்லில் முதலிரண்டு ஆட்டங்களிலும் வெற்றிபெற்று தொடரை சிறப்பாக ஆரம்பித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏனோ அதன் பிறகு அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துவிட்டு இடையில் மேலும் 2 வெற்றிகளைப் பெற்றது.

அதன்படி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 10 ஆட்டங்களில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளைப் பெற்றுள்ளது. மறுபக்கம் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி 9 ஆட்டங்களில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றிபெற்றால் அது ப்ளே ஓப் சுற்றுக்கு ஏதுவானதாக அமையும். சன்ரைசஸ் வெற்றிபெற்றால் அது ராஜஸ்தானின் ப்ளே ஓப் சுற்று வாய்ப்பை கேள்விக்குறியாக்கும்.

Photo:BCCI/IPL

எவ்வாறாயினும், இறுதியாக சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலகுவான வெற்றியைப் பெற்ற மனநிறைவுடன் ராஜஸ்தான் அணி இன்று களமிறங்கத் தயாராகியுள்ளது.

ஜோஸ் பட்லர், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித், ராகுல் திவாட்டியா, ரொபின் உத்தப்பா,பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் துடுப்பாட்டத்தில் நம்பிக்கையளிக்கின்றனர்.

ஜொப்ரா ஆச்சர் வேகப்பந்து வீச்சிலும், ராகுல் திவாட்டியா, ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் சுழல்பந்து வீச்சிலும் அணியைப் பலப்படுத்துகின்றனர்.

வோனர் நம்பிக்கை:

சன்ரைசஸ் அணியைப் பொறுத்த மட்டில் தலைவர் டேவிட் வோனரே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவுள்ளார். அவர் பிரகாசித்தால் அணிவெற்றி பெற்றுவிடும் என்பதே அவர்களுடைய கடந்த கால வரலாறு.

Photo:BCCI/IPL

என்றாலும், ஜொனி பெயார்ஸ்ட்டோ, மனிஸ் பாண்ட்டே,கேன் வில்லியம்ஸன் போன்ற பலமிக்க துடுப்பாட்ட வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பந்து வீச்சில் கைகொடுக்க சுழல்பந்து வீச்சாளரான ரஸீட் கானும், வேகப்பந்து வீச்சாளரான நடராஜனும் இருக்கின்றமை சன்ரைசஸ் அணிக்கு கூடுதல் பலமாகும். இவர்கள் பிரகாசிக்கும் பட்சத்தில் சன்ரைசஸ் அணியால் சிறந்த சவாலை விடுக்கமுடியும்.