Photo: Sri Lanka Cricket
சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களுக்கான 22 பேர் கொண்ட இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தசுன் ஷானக தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அணியின், உப தலைவராக தனன்ஞய டி சில்வா செயல்படவுள்ளார்.
இதனிடையே, இலங்கை கிரிக்கெட் சபையால் அண்மையில் ஏற்பாடு செய்த டயலொக் எஸ்எல்சி அழைப்பு டி-20 தொடரில் திறமையினை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் தென்னாபிரிக்க தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீண்ட இடைவெளி ஒன்றின் பின்னர் இரண்டு கரங்களாலும் பந்துவீசும் ஆற்றல் கொண்ட சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியில் தன்னை பிரதிநிதித்துவம் செய்வதற்கான வாய்ப்பினை பெற்றிருக்கின்றார்.
இலங்கை அணியின் அனுபவ விக்கெட் காப்பு,துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளார்.
அத்துடன், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ள குசல் ஜனித் பெரேரா தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் மாத்திரம் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர அழைப்பு டி-20 தொடரில் திறமையினை வெளிப்படுத்தியிருந்த சகலதுறை வீரர்களான கமிந்து மெண்டிஸும் லஹிரு மதுஷங்கவும் இலங்கை குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன், இளம் சுழல் பந்து வீச்சாளர்களான புலின தரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் முதன் முறையாக இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, குறித்த தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களில் ஒருவரான இளம் வேகப்பந்து வீச்சாளர் ஹிமேஷ் ராமநாயக்க இலங்கை குழாத்தில் இடம்பெறவில்லை.
சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ஒருநாள் மற்றும் டி-20 தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
தசுன் ஷானக (தலைவர்), குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, தனன்ஜய டி சில்வா (உப தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், மினோத் பானுக, தினேஷ் சந்திமால், வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, நுவன் பிரதீப், லஹிரு குமார, அகில தனன்ஜய, பிரவீன் ஜயவிக்ரம, மஹீஷ் தீக்ஷன, புலின தரங்க, லஹிரு மதுஷங்க