November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோக்கியோ பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் வெண்கலம் வென்றார் இலங்கை வீரர் சமித்த

ஜப்பானில் நடைபெற்று வரும் டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கான இரண்டாவது பதக்கத்தை சமித்த துலான் கொடிதுவக்கு பெற்றுக் கொடுத்தார்.

இன்று (30) மாலை நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F64 போட்டியில் 65.61 மீற்றர் தூரத்தை பதிவு செய்த சமித்த துலான் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டரங்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F64 இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெற்றது. இதில் இலங்கை சார்பில் சமித்த துலானும், சம்பத் ஹெட்டியாராச்சியும் பங்குபற்றினர்.

ஆறு சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியின் முதலாவது முயற்சியில் 62.11 மீற்றர் தூரத்தையும், 4ஆவது முயற்சியில் 65.11 மீற்றர் தூரத்தையும் எறிந்த சமித்த, லண்டன் 2012 பாராலிம்பிக்கில் F44 பிரிவில் சீனாவின் மிங்ஜிகாஓவினால் நிலைநாட்டப்பட்டிருந்த 58.53 மீற்றர் என்ற முன்னைய பாராலிம்பிக் சாதனையை முறியடித்து இப் பிரிவுக்கான புதிய  சாதனையை நிலை நாட்டினார்.

இதன்படி, 59.81, 59.81, 63.49, 65.61, 61.64 என 5 ஆவது முயற்சிவரை சமித்த துலான் வெள்ளிப் பதக்கத்துக்கான இரண்டாவது இடத்தில் இருந்தார்.

ஆனால், சமித்தவுக்கு பலத்த போட்டியை கொடுத்த அவுஸ்திரேலிய வீரர் மைக்கல் புரியன், ஆறாவதும், கடைசியுமான முயற்சியில் 66.29 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.இது குறித்த பிரிவுக்கான உலக சாதனையாகவும் பதிவாகியது.

எனவே, சமித்த துலானுக்கு வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு துரதிஷ்டவசமாக கடைசி நேரத்தில் தவறிப் போனது.

இதனிடையே, இந்தியாவின் சந்தீப் சுமித் 68.55 மீற்றர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து F64 பிரிவுக்கான உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். குறித்த போட்டியில் அவர் மேற்கொண்ட 5 முயற்சிகளிலும், அவரது சொந்த உலக சாதனையை புதுப்பித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இது இவ்வாறிருக்க, இப்போட்டியில் பங்குபற்றிய மற்றொரு இலங்கையரான சம்பத் ஹெட்டியாராச்சி, தனது 3 முயற்சிகளிலும் 50 மீற்றரை எட்டத் தவறியதால் தொடர்ந்து போட்டியிடும் தகுதியை இழந்தார்.

இதனால் 10 பேர் பங்கு கொண்ட இந்தப் போட்டியில் 9 ஆவது இடத்தை அவர் பெற்றுக் கொண்டார்.

முன்னதாக இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F46 இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் தினேஷ் பிரியன்த ஹேரத், உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

எனவே, டோக்கியோ பாராலிம்பிக்கின் ஆறாவது நாளான இன்று இலங்கைக்கு வெற்றிகரமான நாளாக அமைந்ததுடன், பதக்கப் பட்டியலில் 45 ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்டது.