டோக்கியோ பாராலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் இரட்டை துடுப்பு படகோட்டத்தில் நிரல்படுத்தலுக்கான பி பிரிவு இறுதிப் போட்டியில் பங்கு கொண்ட மகேஷ் ஜயகொடி கடைசி இடத்தை பெற்று ஏமாற்றம் அளித்தார்.
டோக்கியோ 2020 பாராலிம்பிக் விளையாட்டு விழாவின் ஐந்தாம் நாளான இன்று (29) காலை நடைபெற்ற PR1 பிரிவு ஆண்கள் ஒற்றையர் இரட்டைத் துடுப்புப் படகோட்டத்தின் B பிரிவு இறுதிப் போட்டியில் இலங்கை வீரர் மகேஷ் ஜயகொடி பங்குபற்றினார்.
ஆறு வீரர்கள் பங்குபற்றிய நிரல்படுத்தலுக்கான இப் போட்டியை 13 நிமிடங்கள், 12.33 செக்கன்களில் நிறைவு செய்த மகேஷ் , 6ஆவது இடத்தை பெற்றுக் கொண்டார்
இதற்கமைய 12 வீரர்களுக்கான ஒட்டு மொத்த நிரல்படுத்தலில் மகேஷ் ஜயகொடி 12 ஆவது இடத்தைப் பெற்றார்.
முன்னதாக நடைபெற்ற தகுதிகாண் சுற்று (12:16.80) மற்றும் அதன்பிறகு நடைபெற்ற மறு சுழற்சி எனும் ரெப்சேஜ் தகுதிகாண் சுற்று (11:21.31) ஆகியவற்றில் கடைசி இடத்தையே மகேஷ் ஜயகொடி பெற்றுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, தகுதிகாண் சுற்று மற்றும் ரெப்சேஜ் தகுதிகாண் சுற்று ஆகியவற்றின் மூலம் பதக்க நிலைகளுக்கான A பிரிவு இறுதிப் போட்டியில் யுக்ரெய்னின் ரோமன் போலியான்ஸ்கி (9:48.78) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அவுஸ்திரேலியாவின் எரிக் ஹோரி (10:00.92) வெள்ளிப் பதக்கத்தையும் பிரேசிலின் ரெனே கெம்பஸ் பெரெய்ரா (10:03.54) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.