இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க மற்றும் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர, ஆகிய இருவருக்கும் ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது கட்டத்தில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது.
வனிந்து ஹஸரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோரை, விராட் கோலி தலைவராகச் செயல்படும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒப்பந்தம் செய்திருந்தது.
இவர்கள் இருவரும் முறையே அவுஸ்திரேலிய வீரர்களான அடெம் சாம்பா மற்றும் கேன் ரிச்சட்சன் ஆகியோருக்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.
இதனிடையே, இவர்கள் இருவரும் பெங்களூர் அணியில் இணைக்கப்பட்டிருந்தாலும், ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்கான அனுமதியை இலங்கை கிரிக்கெட் சபை வழங்கியிருக்கவில்லை.
இந்த நிலையில், ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கு வனிந்து ஹஸரங்கவும் துஷ்மந்த சமீரவும் இலங்கை கிரிக்கெட் சபையிடம் எழுத்து மூல அனுமதி கோரியிருந்தனர்.
எனினும், தற்போது, குறித்த இரண்டு வீரர்களுக்கு ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது கட்டத்தில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி-20 தொடர்கள் நிறைவடைந்த பிறகு இவர்கள் இருவரும், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் இணைந்து கொள்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஐ.சி.சி இன் டி-20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியினருடன் ஓமானில் வனிந்து ஹஸரங்கவும் துஷ்மந்த சமீரவும் ஒக்டோபர் 10 ஆம் திகதி இணைந்து கொள்ளவேண்டும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதற்கு அமைய ஐ.பி.எல் இறுதிச் சுற்றில் குறித்த இரண்டு வீரர்களும் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகள் அடுத்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப் போட்டி ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.