
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மொஹமட் ஷிராஜின் அபார பந்துவீச்சில் கொல்கத்தாவை 84 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய பெங்களுர் அணி, 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் ஆடியது. ராகுல் திரிபாத்தி, நித்திஷ் ராணா, சுப்மன் கில், டொம் பென்டன் ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
கொல்கத்தா அணி 3.3 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து கடும் சரிவை எதிர்நோக்கியிருந்தது. அந்த 4 விக்கெட்டுகளில் மூவர் மொஹமட் ஷிராஜ் பந்துவீச்சில் வீழ்ந்தனர்.
அணித்தலைவர் இயோர்ன் மோர்கன் 30 ஓட்டங்களையும், பேர்கஸன் 19 ஓட்டங்களையும் பெற்று கொல்கத்தா அணியின் மானத்தை காத்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 84 ஓட்டங்களைப் பெற்றது.
புந்துவீச்சில் மொஹமட் ஷிராஜ் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், யுஷ்வேந்திர சால் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இலகுவான வெற்றி இலக்கான 85 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. அணித்தலைவர் விராத் கோஹ்லி 18 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தார்.
இந்த வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் பெங்களுர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 14 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ள அதேவேளை, 14 புள்ளிகளுடன் டெல்லி கெபிடெல்ஸ் அணி நிகர ஓட்ட வேகத்தின் அடிப்படையில் முதலிடத்தை வகிக்கிறது.