ஜப்பானில் ஆகஸ்ட் 23 ஆரம்பமான டோக்கியோ 2020 பரா ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் 3 ஆம் நாளான இன்றைய தினம் இலங்கை சார்பாக மூன்று வீரர்கள் தகுதிச் சுற்றில் பங்குபற்றவுள்ளனர்.
வில்வித்தைப் போட்டியில் சம்பத் பண்டார, ஒற்றையர் படகோட்டப் போட்டியில் மஹேஷ் ப்ரியமால் ஜயக்கொடி, சக்கர இருக்கை டென்னிஸ் போட்டியில் ரஞ்சன் தர்மசேன ஆகியோர் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்தவுள்ளனர்.
இந்த மூன்று மாற்றுத்திறனாளிகளில் ஆண்கள் PR1 பிரிவு ஒற்றையருக்கான இரட்டை துடுப்புப் படகோட்டப் போட்டியில் மஹேஷ் ப்ரியமால் ஜயக்கொடி பங்குபற்றுகின்றார்.
இலங்கை சார்பாக இன்றைய தினம் போட்டிட்ட முதலாவது வீரர் இவர் தான் இந்தத் தகுதிகாண் போட்டி டோக்கியோ குடாவில் அமைக்கப்பட்டுள்ள சீ பொரஸ்ட் வோட்டர்வே நீர்நிலையில் இலங்கை நேரப்படி காலை 7.00 மணிக்கு நடைபெற்றது.
இரண்டாவது தகுதிகாண் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய 6 மாற்றுத்திறனாளிகளில் கடைசி இடத்தை ஜயக்கொடி பெற்றார்.
எவ்வாறாயினும், ஆண்கள் PR1 ஒற்றையருக்கான இரட்டைத் துடுப்பு படகோட்டத்தில் ரெப்சேஜ் எனும் மற்றொரு தகுதிகாண் சுற்றில் இலங்கையின் மாற்றுத்திறனாளி மஹேஷ் ப்ரியமால் ஜயக்கொடி பங்குபற்ற தகுதிபெற்றுள்ளார். இந்தப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இதனிடையே, ஜயக்கொடியைத் தொடர்ந்து இலங்கை சார்பாக டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் இரண்டாவதாக போட்டியிடுபவர் சக்கர இருக்கை டென்னிஸ் வீரர் ரஞ்சன் தர்மசேன ஆவார்.
ஏரியேக் பார்க் டென்னிஸ் அரங்கில் நடைபெறும் ஆண்களுக்கான ஒற்றையர் சக்கர இருக்கை டபிள்யூரி பிரிவு டென்னிஸ் போட்டியில் சிலி நாட்டு வீரர் அலெக்சாண்டர் கட்டல்டோவை எதிர்த்தாடவுள்ளார்.
இதேவேளை, யுமேனோஷிமா ரான்கிங் பீல்ட் களத்தில் நடைபெறவுள்ள வில்வித்தை ST பிரிவு தரவரிசைப்படுத்தல் போட்டியில் சம்பத் பண்டார பங்குபற்றவுள்ளார்.