Photo: Sri Lanka Cricket
ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் பங்கேற்பதற்காக டெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது.
கட்டார் விமானசேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம், இன்று அதிகாலை 2.15 மணியளவில் தென்னாபிரிக்கா அணி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமான நிலையத்தை வந்தடைந்த தென்னாபிரிக்க அணியினர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்று தென்னாபிரிக்க அணியினரை வரவேற்றுள்ளனர்.
இதனிடையே, இலங்கை தொடருக்காக அறிவிக்கப்பட்ட தென்னாபிரிக்கா அணியில் குயிண்டன் டி கொக், லுங்கி என்கிடி மற்றும் டேவிட் மில்லர் ஆகிய வீரர்கள் இடம்பெறவில்லை.
அதேபோல, இலங்கைக்கு புறப்பட முன்னர் கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் ஜுனியர் டலா மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் சார்ல் லெங்வெல்ட் ஆகிய இருவரும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து விலகிக் கொண்டனர்.
இந்த நிலையில், நாட்டை வந்தடைந்த தென்னாபிரிக்கா அணியினர் இலங்கை அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை பின்பற்றி சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.