Photo: ICC Twitter
இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று இந்திய அணி வெறும் 78 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான சாதனை படைத்தது.
இதன்மூலம் 79 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்து மண்ணில் தனது குறைந்த டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது.
இங்கிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது.
இதில் முதல் டெஸ்ட் சமநிலையானதைத் தொடர்ந்து லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த நிலையில், ஹெட்டிங்க்லியின் லீட்ஸ் மைதானத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டி இன்று (26) ஆரம்பமாகியது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோலி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி களமிறங்கியது.
அதன்படி, களமிறங்கிய இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். ரோகித் சர்மாவை தவிர்த்து ஏனைய வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர்.
கே.எல்.ராகுல் (0), புஜாரா (1), கோலி (7) ஆகியோர் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகத்தில் வீழ்ந்தனர். பின்னர் வந்த ரஹானே ஓரளவுக்கு தாக்கு பிடித்தார். ரஹானே (18), ரிஷப் பாண்ட் (2) ஜடேஜா (4) ஆகியோரும் அடுத்தடுத்து வெளியேறினர்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பும்ரா, ஷமி ஆகிய இருவரும் இந்த முறை ஓட்டம் எதுவுமின்றி ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 78 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ரொபின்சன், சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனிடையே, இந்தப் போட்டியில் கோலியை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் டெஸ்ட் அரங்கில் கோலியை அதிக முறை ஆட்டமிழக்க செய்த பந்து வீச்சாளர் என்ற பெருமையை நாதன் லயனுடன் (அவுஸ்திரேலியா) ஜேம்ஸ் ஆண்டர்சன் பகிர்ந்து கொண்டார்
லயன், ஆண்டர்சன் ஆகிய இருவரும் தலா 7 தடவைகள் கோலியை ஆட்டமிழக்கச் செய்துள்ளனர். ஸ்டுவர்ட் பிரோட், மொயின் அலி, பாட் கம்மின்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 5 தடவைகள் கோலியை ஆட்டமிழக்கச் செய்துள்ளனர்.
இதேவேளை, 78 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, 79 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து மண்ணில் தனது குறைந்த டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது.
இதற்கு முன் 1975 லோர்ட்ஸ் டெஸ்டில் 42 ஓட்டங்கள், 1952 ஓல்ட் ட்ரபோர்ட் டெஸ்டில் 58 ஓட்டங்களுக்கு இந்திய அணி சுருண்டது. தற்போது மூன்றாவது குறைந்த ஓட்ட எண்ணிக்கையை இந்தியா பதிவு செய்தது.