July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அழைப்பு டி-20 தொடர்; தசுன் ஷானகவின் கிரேய்ஸ் அணி சம்பியனானது

டயலொக் – எஸ்எல்சி அழைப்பு டி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் சந்திமாலின் ரெட்ஸ் அணியை வீழ்த்தி தசுன் ஷானகவின் கிரேய்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டது.

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு அணிகளுக்கிடையிலான டயலொக் – எஸ்எல்சி அழைப்பு டி-20 கிரிக்கெட் தொடர் கடந்த இரண்டு வாரங்களாக கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டித் தொடரின் புள்ளிப் பட்டியலில் முதலிரண்டு இடங்களையும் பிடித்த தினேஷ் சந்திமால் தலைமையிலான ரெட்ஸ் அணியும் தசுன் ஷானக தலைமையிலான கிரேய்ஸ் அணியும் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிரேய்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கிரேய்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 6 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது

மினோத் பானுக்க 51 பந்துகளில் 74 ஓட்டங்களையும், அணித் தலைவர் தசுன் ஷானக 17 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 4 பௌண்டறிகளுடன் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும் நுவனிந்து பெர்னாண்டோ 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

ரெட்ஸ் அணியின் பந்து வீச்சில் அகில தனன்ஜய 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரெட்ஸ் அணி 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஓசத பெர்னாண்டோ 46 ஓட்டங்களையும், அகில தனன்ஜய ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும், அசேல குணரட்ன 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

கிரேய்ஸ் அணியின் பந்துவீச்சில் புலின தரங்க, நுவன் பிரதீப் மற்றும் மதீஷ பதிரண ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்படி, 42 ஓட்டங்களால் வெற்றி பெற்ற கிரேய்ஸ் அணி, டயலொக் – எஸ்எல்சி அழைப்பு டி-20 கிரிக்கெட் தொடரின் சம்பியனாக  தெரிவாகியது

சம்பியன் பட்டம் வென்ற கிரேய்ஸ் அணிக்கு, 2 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டதுடன், இரண்டாவது இடத்தைப் பிடித்த ரெட்ஸ் அணிக்கு 1.5 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.

அத்துடன், தொடர் ஆட்டநாயகன் விருதை வென்ற தசுன் ஷானகவுக்கு 2 இலட்சம் ரூபா பரிசுத் தொகையாக வழங்கப்பட்டதுடன், இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனான மினோத் பானுக்கவுக்கு 50 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.