
Photo: Tokyo Paralympic Twitter
உலகம் முழுவதிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் ஆற்றல்களை வெளிக்கொணரும் 16 ஆவது பாராலிம்பிக் விளையாட்டு விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக ஆரம்பமாகியது.
இம்முறை பாராலிம்பிக்கில் 162 நாடுகளை சேர்ந்த த 4,400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றுள்ளார்கள். இதில் 22 விளையாட்டுகளில் மொத்தம் 540 தங்கப் பதக்கங்களுக்கு போட்டியிடவுள்ளார்கள்.
‘பாரா விமான நிலையம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற ஆரம்ப விழாவில் முதலில் ஜப்பானின் தேசிய கொடி விளையாட்டரங்குக்கு கொண்டு வரப்பட்டதுடன், அந்நாட்டு தேசிய கீதம் மாற்றுத்திறனாளி கலைஞர்களால் பாடப்பட்டது.
இதனைத் தொடரந்து ஆரம்ப விழாவின் முக்கிய அம்சமாக 162 நாடுகளையும் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய கொடியுடன் அணிவகுத்து விளையாட்டரங்கில் நுழைந்தனர்.
இதனையடுத்து பாராலிம்பிக் ஆரம்ப விழா வீரர்கள் அணிவகுப்பில் முதல் நாடாக பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் இரண்டாவது முறையாக பங்கேற்கும் ‘அகதிகள் பாராலிம்பிக் அணி’ தங்கள் கொடியுடன் அணிவகுத்து சென்றனர்.
அவர்களைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, அயர்லாந்து, அஸர்பைஜான் அணிகள் சென்றன. தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணியின் தேசியக் கொடியை பாராலிம்பிக் தன்னார்வ உறுப்பினர் ஒருவர் ஏந்திச் சென்றார்.
இதனையடுத்து ஆங்கில அகரவரிசைப்படி நாடுகள் அணிவகுத்து சென்றன.
இந்த நிலையில், பாராலிம்பிக் ஆரம்ப விழாவில் ஈட்டி எறிதல் வீரர் தினேஷ் ப்ரியன்த ஹேரத் இலங்கை தேசியக் கொடியை எந்திச் சென்று அணிவகுப்பிற்கு தலைமை தாங்கினார். இவர்களைத் தொடர்ந்து இலங்கை வீர, வீராங்கனைகள் மற்றும் அதிகாரிகள் அணிவகுத்து சென்றனர்.
இம்முறை பாராலிம்பிக் விளையாட்டு விழா ‘எமக்கு சிறகுகள் உண்டு’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் என சர்வதேச பாராலிம்பிக் சங்கத்தின் தலைவர் அன்ட்ரூ பார்சன்ஸ் அறிவித்தார்.
இதனையடுத்து டோக்கியோ 2020 பாராலிம்பிக் விளையாட்டு விழாவை ஜப்பான் பேரரசர் நருஹித்தோ சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இறுதியில் ஜப்பானுக்காக பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றி பதக்கங்களை வென்ற வீரர்களின் பங்குபற்றலுடன் பாராலிம்பிக் ஜோதி ஏற்றி வைக்கப்பட்டது.
எனவே சுமார் மூன்று மணித்தியாலங்கள் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் ஆரம்ப விழாவானது பாடல், ஆடல் மற்றும் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் நிறைவுக்கு வந்தன.