Photo: ICC Twitter
இலங்கையில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகள் பங்குபெறும் ஒருநாள் தொடர் அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.
எனினும், குறித்த காலப்பகுதியில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் எஞ்சிய போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட காரணத்தினால் ஒருநாள் தொடரை செப்டம்பர் மாத தொடக்கத்தில் இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தாலிபான்கள் வசம் சென்றுள்ள நிலையில், விமானப் போக்குவரத்து பாதிப்புகள், வீரர்களின் மனநலம் ஆகியவற்றை காரணம் காட்டி இந்த போட்டி தொடர் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஹமீத் ஷின்வாரி, இந்த தொடரை பாகிஸ்தானில் நடத்துவதாக நேற்று உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், இறுதியில் ஆப்கானிஸ்தானை சுற்றியுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு குறித்த தொடரை ஒத்திவைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்தார்.
எனவே, ஒருநாள் தொடரை ஒத்திவைப்பதற்கு இரு நாட்டு அணிகளின் கிரிக்கெட் சபைகளும் ஒப்புதல் அளித்து, முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.