July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்க தொடருக்கான 30 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடருக்கான 30 பேர் கொண்ட முதற்கட்ட இலங்கை குழாம் விபரத்தை சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில் முக்கிய மாற்றமாக, அனுபவ வீரர் தினேஷ் சந்திமால் இணைக்கப்பட்டுள்ளார்.

இறுதியாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் தொடரில், சந்திமால் விளையாடியிருந்த நிலையில், தற்போது டயலொக் SLC அழைப்பு டி-20 தொடரில் சிறப்பாக பிரகாசித்த காரணத்தால் மீண்டும் இலங்கை குழாத்துக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, டயலொக் SLC அழைப்பு டி-20 தொடரில் சிறப்பாக பிரகாசித்த இளம் வீரர் கமிந்து மெண்டிஸ் மற்றும் சகலதுறை வீரர் லஹிரு மதுஷங்க ஆகியோரும் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

கமிந்து மெண்டிஸ் இரண்டு கைகளாலும் பந்து வீசக்கூடியவர் இவர்,

அதேநேரம், புதுமுக வீரர்களாக மஹீஷ்  தீக்ஷன, புலின தரங்க, சஹன் ஆரச்சிகே மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர், டயலொக் SLC அழைப்பு டி-20 தொடரில் சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தியதன் ஊடாக, தேசிய அணி வாய்ப்பை பெற்றுள்ளனர்.இவர்கள், கடந்த வருடம் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக்கிலும் சிறப்பாக பிரசாகித்திருந்தனர்.

அத்துடன், கொவிட்-19 தொற்றுக்குள்ளாகிய குசல் பெரேரா, குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், தொடரில் விளையாடுவதற்கு இவர் தயாராகிவிடுவார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், அனுபவ வீரர்களான திமுத் கருணாரத்ன, சுரங்க லக்மால் மற்றும் அஞ்சலோ மெதியூஸ் ஆகியோர் இலங்கை குழாத்தில் இணைக்கப்படவில்லை.

அறிவிக்கப்பட்டுள்ள இந்த 30 பேர் கொண்ட குழாத்திலிருந்து, தென்னாபிரிக்க தொடருக்காக 20-22 வீரர்கள் தெரிவு செய்ப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், குறித்த 30 வீரர்களும் டி-20 உலகக் கிண்ணத்துக்கான கொவிட்-19  கட்டுப்பாட்டு வலயத்தில் பயிற்சிகளில் ஈடுபடுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா – இலங்கை அணிகளுக்கிடையிலான தொடர் செப்டம்பர் மாதம் 2 ம் திகதி முதல் 14 ம் திகதிவரை கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

தசுன் ஷானக (தலைவர்), குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, தனன்ஜய டி சில்வா, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், மினோத் பானுக, தினேஷ் சந்திமால், அஷேன் பண்டார, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, சஹன் ஆரச்சிகே, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ. நுவன் பிரதீப், டில்ஷான் மதுஷங்க, லஹிரு குமார, அகில தனன்ஜய, பிரவீன் ஜயவிக்ரம, மஹீஷ் தீக்ஷன, புலின தரங்க, ரமேஷ் மெண்டிஸ், லக்‌ஷான் சந்தகன், அசித பெர்னாண்டோ, இஷான் ஜயரத்ன, தனன்ஜய லக்‌ஷான்