November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐபிஎல் தொடரில் களமிறங்கும் முதல் சிங்கப்பூர் வீரர்!

Photo: Twitter/@eplt20official

ஐபிஎல்  வரலாற்றில் முதன் முறையாக சிங்கப்பூரைச் சேர்ந்த 25 வயதான டிம் டேவிட் என்ற இளம் வீரரை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

14 ஆவது ஐபிஎல் தொடருக்கான மீதமுள்ள போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஏற்கனவே முதல்கட்ட போட்டிகளில் ஒப்பந்தமாகிய சில வீரர்கள் சொந்த காரணங்களால் இரண்டாவது கட்ட ஐபிஎல் போட்டிகளை தவறவிடும் நிலையில், அவர்களுக்கான மாற்று வீரர்கள் இணைக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், விராத் கோலி  தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து அவுஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்ப்பா, டேனியல் சேம்ஸ் விலகினர். இவர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்ய பெங்களூர் அணி நிர்வாகம் முடிவு செய்தது.

இதன்படி, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இலங்கையின் வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர ஆகியோரோடு சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் எனும் 25 வயதான இளம் வீரர் ஒருவரும் பெங்களூர் அணியில் நேற்று இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் இப்படியான நாடுகளிலிருந்து அதிக வீரர்கள் ஐபிஎல் விளையாடுவதை அறிந்திருக்கின்றோம், ஆனால் சிங்கப்பூர் போன்ற ஒரு நாட்டில் இருந்து ஐபிஎல்லில் இணைத்துக்கொள்ளப்படும் அளவிற்கு டிம் டேவிட் யார் என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.

இவருடைய தந்தையார் ஒரு பொறியியலாளர், சிங்கப்பூர் தேசிய கிரிக்கெட் அணிக்காக இவர் உலக கிண்ண தகுதிகாண் போட்டிகளில் 1997 இல் விளையாடியிருக்கிறார்.

தற்போது ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 25 வயதாகும் டிம் டேவிட்,  சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.

அந்த நாட்டு அணிக்காக இதுவரை 14 சர்வதேச டி-20 போட்டிகளில் டிம் டேவிட் விளையாடி 558 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

சமீபத்தில் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த டிம் டேவிட், அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் பிரபலமான பிக்பேஷ் லீக் போட்டிகளில் ஹோபர்ட் ஹரிக்கேனஸ் மற்றும் பேர்த் ஸ்கோர்சஸ் அணிகளுக்காகவும் விளையாடியிருக்கிறார்.

அத்துடன், பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளிலும் விளையாடியிருக்கும் டிம் டேவிட்டுக்கு கோலி தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.