July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘த ஹண்ட்ரட்’ தொடரில் மஹேலவின் சதர்ன் பிரேவ் அணி சம்பியனானது

இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் முதல் முறையாக ஒழுங்கு செய்த அணிக்கு 100 பந்துகள் கொண்ட ‘த ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடரின் ஆடவர் சம்பியனாக ‘சதர்ன் பிரேவ்’ அணி (Southern Brave) தெரிவாகியது.

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெர்மிங்ஹம் பீனிக்ஸ் அணியை சதர்ன் பிரேவ் அணி 32 ஓட்டங்களால் வெற்றிகொண்டு சம்பியனானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெர்மிங்ஹம் பீனிக்ஸ் அணியின் தலைவர் மொயீன் அலி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை, சதர்ன் பிரேவ் அணிக்கு வழங்கியிருந்தார்.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய சதர்ன் பிரேவ் அணியினர் 100 பந்துகள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

சதர்ன் பிரேவ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பவீரராக களமிறங்கிய போல் ஸ்டேர்லிங், வெறும் 36 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஸ் விட்லி 19 பந்துகளுக்கு 4 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 44 ஓட்டங்களை எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பெர்மிங்ஹம் பீனிக்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் அடம் மில்னே 20 பந்துகளை வீசி 2 விக்கெட்டுக்களை கைப்பற்ற, இம்ரான் தாஹிர், பென்னி ஹொவல் மற்றும் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 169 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய  பெர்மிங்ஹம் பீனிக்ஸ் அணி 100 பந்துகளுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினை தழுவியது.

பெர்மிங்ஹம் பீனிக்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் லியாம் லிவிங்ஸ்டன் 19 பந்துகளுக்கு 46 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டார்.

போட்டியின் ஆட்டநாயகனாக போல் ஸ்டெர்லிங் தெரிவாக, தொடர் நாயகனாக லியாம் லிவிங்ஸ்டன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஐபிஎல் போட்டிகளில் பயிற்சியாளராக 2017 இல் அறிமுகமான மஹேல ஜயவர்தன முதல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுத்ததைப் போல, முதலாவது த ஹண்ட்ரட் தொடரிலும் சதர்ன் பிரேவ் அணிக்கு சம்பியன் பட்டம் வென்று கொடுத்து ஒரு வெற்றிகரமான பயிற்சியாளர் தான் என்பதை மஹேல நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

இதேவேளை, இப் போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற மகளிர் இறுதிப் போட்டியிலும் சதர்ன் பிரேவ் அணி விளையாடியபோதிலும் ஓவல் இன்வின்சி;ப்ள்ஸிடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது.