July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை கிரிக்கெட் வருடாந்த ஒப்பந்தத்தில் பதினெட்டு வீரர்கள் கைச்சாத்து

இலங்கை கிரிக்கெட் வருடாந்த வீரர்கள் ஒப்பந்தத்தில் 18 வீரர்கள் கையெழுத்திட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தமானது, ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்கு முதல் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களில், எந்தவித மாற்றங்களும் இல்லையென இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, தேர்வுக்குழுவினர் நான்கு பிரிவுகளாக வீரர்களுக்கான ஒப்பந்தத்தை வகுத்துள்ளனர். இதில், முக்கியமாக செயல்திறன், உடற்தகுதி, தலைமைத்துவம், அனுபவம், தொழில்முறை, நடத்தை மற்றும் எதிர்காலம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, பல வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பவில்லை. வகைப்படுத்தல் தொடர்பாக ஒவ்வொரு வீரருக்கும் எவ்வாறு புள்ளிகள் ஒதுக்கப்பட்டது என்பதில் சில வெளிப்படைத்தன்மை கோரப்பட்ட நிலையில், ஒப்பந்தத்தில் கையழுத்திடவில்லை. எனினும், தற்போது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

குறித்த இந்த ஒப்பந்தத்தில் முதல் முறையாக அஞ்சலோ மெத்யூஸ் இணைத்துக் கொள்ளப்படவில்லை. அஞ்சலோ மெத்யூஸ் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக அணித் தேர்விலிருந்து விலகுவதாக குறிப்பிட்டார். எனவே, இம்முறை ஒப்பந்தத்தில் அவர் இணைக்கப்படவில்லை.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபையின் தடைக்கு முகங்கொடுத்திருக்கும் குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கும் இம்முறை ஒப்பந்தம் வழங்கப்படவில்லை என்பதுடன், தொடர்ந்து உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற வேகப்பந்து வீச்சாளர் கசுன் ராஜிதவும் ஒப்பந்தத்தில் இணைக்கப்படவில்லை.

அது மாத்திரமல்லாமல் சாமிக கருணாரத்ன, பானுக ராஜபக்ஷ, நுவன் பிரதீப், பிரவீன் ஜயவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ மற்றும் சரித் அசலங்க உள்ளிட்ட வீரர்களும் இந்த ஒப்பந்தத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தம் பெற்றுள்ள 18 வீரர்கள்

தனன்ஜய டி சில்வா, குசல் பெரேரா, திமுத் கருணாரத்ன, சுரங்க லக்மால், தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, பெதும் நிஸ்ஸங்க, லஹிரு திரிமான்ன, துஷ்மந்த சமீர, தினேஷ் சந்திமால், லக்ஷான் சந்தகன், விஷ்வ பெர்னாண்டோ, ஓசத பெர்னாண்டோ, ரமேஷ் மெண்டிஸ், லஹிரு குமார, அஷேன் பண்டார, அகில தனன்ஜய, லசித் எம்புல்தெனிய