
கென்யாவின் நைரோபியல் நடைபெற்றுவரும் 20 வயதுக்கு உட்பட்ட உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பின்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் அரையிறுதிப் போட்டியில் பங்குபற்ற இலங்கை வீராங்கனை மேதானி ஜயமான்ன தகுதிபெற்றார்.
இன்று பிற்பகல் நடைபெற்ற 2 ஆவது தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய மேதானி 200 மீட்டர் ஓட்டத்தை 24.01 செக்கன்களில் நிறைவு செய்து 4வது இடத்தைப் பெற்றார்.
200 மீட்டர் போட்டிகளில் அவரது சிறந்த காலப்பெறுமதியாகவும் இது பதிவாகியது.
இதன்படி, அரை இறுதிக்காக தெரிவு செய்யப்பட்ட 24 வீராங்கனைகளில் 16ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இன்று இரவு நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
முன்னதாக போட்டிகளில் முதல் நாளான நேற்றுமுன்தினம் நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் அரை இறுதிப் போட்டி வரை முன்னேறிய மேதானிக்கு ஒட்டுமொத்த நிலையில் 21 ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.
இதேவேளை, மேதானி பங்குபற்றிய 2 ஆவது தகுதிகாண் போட்டியில் நமீபியாவின் பீட்ரைஸ் மசிலிங்கி (22.65 செக்) முதலாவது இடத்தையும் சேர்பியாவின் இவானா இலிக் (22.71 செக்) 2ஆம் இடத்தையும் போலந்தின் மார்டா சிம்னா (23.95) 3ஆம் இடத்தையும் பெற்றனர்.