July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்; ஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

Photo: Cricket Australia Twitter

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி-20 உலகக் கிண்ணப் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை  அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை டி-20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான இறுதி அணிப் பட்டியலை ஒவ்வொரு அணியினரும் அறிவித்து வருகின்றனர்.

ஏற்கெனவே நியூஸிலாந்து அணி அறிவித்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய அணியும் டி-20 அணியை அறிவித்துள்ளது

அவுஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட அணியில் விக்கெட் காப்பாளராக மெத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் விக்கெட் காப்பாளராக மேற்கு அவுஸ்திரேலிய வீரர் ஜோஸ் இங்லிஸ் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆரோன் பின்ச்சும் காயத்திலிருந்து மீண்டுள்ளதால், அவர்தான் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அண்மையில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் தொடர்களில் இடம்பெறாத கிளென் மெக்ஸ்வெல், கேன் ரிச்சார்ட்ஸன், மார்கஸ் ஸ்டொய்னிஸ், டேவிட் வோர்னர், பாட் கம்மின்ஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அத்துடன், முழங்கை காயத்திலிருந்து ஸ்டீவ் ஸ்மித் மீண்டுவிட்டதால் அவரும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

சுழல்பந்து வீச்சுக்கு நான்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குயின்லாண்ட் வீரர் மிட்செல் ஸ்வீப்ஸன், அஸ்டன் அகார், ஆடம் ஸம்ப்பா, கிளென் மெக்ஸ்வெல் ஆகியோர் உள்ளனர்.

வேகப்பந்து வீச்சில் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சார்ட்ஸன், பாட் கம்மின்ஸ், சகலதுறை வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் உள்ளனர்.

டஸ்மானிய வீரர் நாதன் எலிஸ், டேனியல் சாம்ஸ், டேன் கிறிஸ்டியன் ஆகியோர் அவுஸ்திரேலிய அணியுடன் ஐக்கிய அரபு இராச்சியம் செல்லும் காத்திருப்பு வீரர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணி செப்டம்பர் இறுதி அல்லது ஒக்டோபர் முதல்வாரம் ஐக்கிய அரபு இராச்சியம் புறப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி: ஆரோன் பின்ச் (தலைவர்), அஸ்டன் அகார், பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட், ஜோஸ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மெக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மிட்செல் ஸ்வெப்ஸன், மெத்யூ வேட், டேவிட் வோர்னர், ஆடம் ஸாம்ப்பா.