இந்தியாவுக்கு எதிரான தொடர் வெற்றிகரமாக நடைபெற்றதன் மூலம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு 208 கோடி ரூபா இலாபம் கிடைத்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி ஒருநாள் தொடரை 2–1 என வென்றது. எனினும், 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை 1-2 என இந்திய அணி பறிகொடுத்தது.
இருப்பினும், இத்தொடர் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு 208 கோடி ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக அதன் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வழக்கமான போட்டி அட்டவணைப்படி இந்திய அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மட்டும் பங்கேற்க இருந்தது. ஆனால் இலங்கை கிரிக்கெட் சபையின் கோரிக்கைக்கு அமைய கூடுதலாக 3 டி–20 போட்டிகளில் இந்தியா பங்கேற்றது.
இதனால் இந்தத் தொடருக்கான வர்த்தக மதிப்பு அதிகரித்தது. நேரடி ஒளிபரப்பு, மைதான விளம்பர உரிமை உட்பட பல்வேறு வழிகளில் எங்களுக்கு 208 கோடி ரூபா இலாபம் கிடைத்தது. இந்த மோசமான பேரிடர் காலங்களிலும், இந்திய அணி இலங்கை வந்தது. இந்திய கிரிக்கெட் சபையுடன் கொண்ட நட்புறவு காரணமாக இது சாத்தியமானது என அவர் கூறினார்.