Photo: Afghanistan cricket/Facebook
நாட்டில் அசாதாரண சூழல் நிலவினாலும் டி-20 உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணி விளையாடும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஐசிசியின் டி-20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் அக்டோபர் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் டி-20 உலகக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் உள்ள குரூப் – 2 பிரிவில் ஆப்கானிஸ்தான் அணி இடம்பெற்றுள்ளது.
எனினும், ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழல் நிலவினாலும் டி-20 உலகக் கிண்ணத்தில் அந்த அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊடக முகாமையாளர் ஹிக்மத் ஹசன் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்இதனை கூறியுள்ளார்.
”நாங்கள் டி-20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவோம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் சில நாட்களில் எமது வீரர்கள் காபூலில் பயிற்சியை மீண்டும் தொடங்குவார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ” ரஷித் கான், மொஹமட் நபி ஆகியோர் தற்போது ஆப்கானிஸ்தானில் இல்லை. நாங்கள் எப்போதும் எங்களுடைய வீரர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும் உதவி செய்து வருகிறோம். எங்களால் என்னென்ன முடியுமோ? அதையெல்லாம் செய்வோம். காபூலில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. நாங்கள் அலுவலகத்திற்கு வந்துள்ளோம். அதனால் கவலைப்படுவதற்கு ஏதுமில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.