ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்தியாவில் இந்தாண்டு திட்டமிட்டது போல் பார்வையாளர்களின்றி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கப்பட்டாலும், கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, இடையிலேயே போட்டி தொடர் நிறுத்தப்பட்டது.
நீண்ட ஆலோசனைகளுக்கு பின்பு ஐ.பி.எல் 2021 சீசனின் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்தது. இதனையடுத்து செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அக்டோபர் 15 ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.
ஐ.பி.எல் போட்டிகளில் அனைத்து அணிகளிலும் அவுஸ்திரேலிய வீரர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். ஒவ்வொரு முறையும் ஐ.பி.எல்.லில் பங்கேற்க அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் வீரர்கள் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.
தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்கும் அனுமதி பெற வேண்டும் என்ற சூழலில், அந்நாட்டு கிரிக்கெட் சபை ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க விரும்பும் வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதனையடுத்து ஐ.பி.எல்.லில் அவுஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் தொடர் முடிந்த அடுத்த இரண்டு நாட்களில் ஐக்கிய அரபு இராச்சியம், ஓமானில் ஐ.சி.சி. இன் டி-20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெற இருப்பதால் அதற்கு ஏற்ப அவுஸ்திரேலிய வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதன்படி, ஐ.பி.எல் தொடரில் பங்கேற்ற டேவிட் வோர்னர், கிளென் மெக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஸ்டாய்னிஸ், ஜே ரிச்சார்ட்ஸன், கேன் ரிச்சார்ட்ஸன், டேனியல் சேம்ஸ் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
இதனிடையே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பாட் கம்மின்ஸ்,தனக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஐ.பி.எல் 2 ஆவது பகுதியில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளார்.