October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ் நாடு பிரீமியர் லீக்; 3ஆவது முறையாக சம்பியனானது சேப்பாக் சுப்பர் கில்லீஸ்

Photo: TNPL Twitter

தமிழ் நாடு பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் திருச்சி அணியை வீழ்த்தி சேப்பாக் சுப்பர் கில்லீஸ் 3 ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.

தமிழ் நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டி நேற்று (15) நடைபெற்றது. இதில் சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணியுடன் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி மோதியது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்களை குவித்தது.

சேப்பாக் அணியில் ஜெகதீசன் அதிகபட்சமாக 90 ஓட்டங்களை எடுத்தார். திருச்சி வாரியர்ஸ் தரப்பில் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் ராகில் ஷா மற்றும் பொய்யாமொழி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 184 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி வாரியர்ஸ் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அமீத் சாத்வீக் மற்றும் சந்தோஷ் ஷிவ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடியாக ஆடிய அமீத் சாத்வீக் 16 பந்துகளில் 36 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார். சந்தோஷ் ஷிவ் 12 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்கள் சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில் 20 ஓவர்களில் முடிவில் திருச்சி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதனால் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சுப்பர் கில்லீஸ் 3ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.

ஏற்கனவே 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் சம்பியன் பட்டத்தை சேப்பாக் சுப்பர் கில்லீஸ் வென்றிருந்தது.

இதனிடையே, சம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.50 இலட்சமும், 2 ஆவது இடம் பிடித்த திருச்சி அணிக்கு ரூ.30 இலட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.