November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொவிட்-19 தொற்று உறுதி

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளளன.

கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துடனான தொடரை நிறைவு செய்து நாடு திரும்பிய குசல் பெரேரா உபாதை காரணமாக இந்தியாவுடனான ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் விளையாடவில்லை.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்ற அழைப்பு டி-20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை.

இதனிடையே, தென்னாபிரிக்க அணியுடனான தொடரை இலக்காகக் கொண்டு பயிற்சிகளை முன்னெடுப்பதற்காக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போதே அவர் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடன் அடுத்த மாத முற்பகுதியில் நடைபெறவுள்ள ஒருநாள், டி-20 தொடர்களில் குசல் பெரேரா பங்கேற்கும் வாய்ப்பை தவறவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.