July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ஓட்டங்களை கடந்து ஜோ ரூட் புதிய சாதனை

Photo: Sri Lanka Cricket

இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டி புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

இதன்மூலம், குறைந்த வயதில் 9 ஆயிரம் ஓட்டங்களை எட்டியவர் வரிசையில் சச்சின் டெண்டுல்கரை முந்தியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 30 வயது 253 நாட்களில் 9 ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களை எட்டினார். எனினும், ஜோ ரூட் இதே மைல்கல்லை 30 வயது 227 நாட்களில் எட்டியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான அலெஸ்டயார் குக் 30 வயது 159 நாட்களில் 9 ஆயிரம் ஓட்டங்களை எட்டினார்.

இதனிடையே, குறைந்த இன்னிங்ஸில் 9 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய வீரர்கள் வரிசையில் இலங்கையின் குமார் சங்கக்கார தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இதேவேளை, டெஸ்ட் அரங்கில் அறிமுகமாகி குறைந்த நாட்களில் (3167) 9 ஆயிரம் ஓட்டங்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் முதலிடம் பிடித்தார்.அடுத்த இரு இடங்களில் அலெஸ்டயார் குக் (3380 நாட்கள்), இந்தியாவின் ராகுல் டிராவிட் (3661) உள்ளனர்.