July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோக்கியோ ஒலிம்பிக் நிறைவுக்கு வந்தது: பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அனைத்தும் இன்றுடன் நிறைவுக்கு வந்தன.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

39 தங்கம், 41 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் என்ற அடிப்படையில் மொத்தமாக 113 பதக்கங்களை அமெரிக்கா பெற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி அதிகளவான தங்கப் பதக்கத்தை பெற்ற நாடுகளின் வரிசையிலும், மொத்த பதக்கங்களை பெற்ற நாடுகளின் வரிசையிலும் அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது.

இதேவேளை 38 தங்கம், 32 வெள்ளி மற்றும் 18 வெண்கலம் என்ற அடிப்படையில் மொத்தமாக 88 பதக்கங்களுடன் அதிகளவான தங்கப் பதக்கங்களையும், அதிகளவான பதக்கங்களையும் பெற்ற நாடுகளின் வரிசையில் சீனா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

அத்துடன் 27 தங்கம், 14 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் என்ற அடிப்படையில் மொத்தமாக 58 பதக்கங்களை பெற்று அதிகளவான தங்கப் பதக்களை பெற்ற நாடுகளின் பட்டியலில் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது.

எனினும் மொத்த பதக்கங்களின் அடிப்படையில் ஜப்பான் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

22 தங்கம், 21 வெள்ளி மற்றும் 22 வெண்கலம் என்ற அடிப்படையில் மொத்தமாக 65 பதக்கங்களை பிரித்தானியா பெற்றுள்ளது. இதன்படி அதிகளவான தங்கப் பதக்கங்களை பெற்ற நாடுகளின் பட்டியலிலும் அதிகளவான பதக்கங்களை பெற்ற நாடுகளின் பட்டியலிலும் பிரித்தானியா நான்காமிடத்தை பெற்றுள்ளது.

அத்துடன் 20 தங்கம், 28 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என்ற அடிப்படையில் மொத்தமாக 71 பதக்கங்களுடன் அதிகளவான தங்கப் பதக்கப் பட்டியலில் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது. எவ்வாறெனினும் மொத்த பதக்கங்களின் அடிப்படையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கொவிட் தொற்றுக் காரமாக 2020 ஆம் ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம் ஜுலை 23 ஆம் திகதி ஆரம்பமானது.

இதில் மொத்தமாக 46 வகையான போட்டிகளில் 339 பிரிவுகளின் கீழ், 205 நாடுகளை சேர்ந்த 11,090 போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.