July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்று இந்திய ஹொக்கி அணி சாதனை

Photo: Tokyo Olympic Twitter

டோக்கியோ ஒலிம்பிக் இந்தியா – ஜேர்மன் அணிகள் இடையிலான வெண்கலப் பதக்கத்துக்கான ஆண்களுக்கான ஹொக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

வெண்கலப் பதக்கத்துக்கான ஆண்களுக்கான ஹொக்கி போட்டி இன்று (05) நடைபெற்றது. இதில் இந்தியா – ஜேர்மன் அணிகள் மோதின.

போட்டி தொடங்கிய முதல் 2 ஆவது நிமிடத்திலேயே ஜேர்மனி அணி கோல் அடித்து முன்னணி வகித்தது.

முதல் கால் ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்து. ஆனால் இந்தியா முதல் கோலை பதிவு செய்யவில்லை. ஆனால் அதன் பின்பு ஜேர்மன் 2 கோல்களை அடுத்தடுத்து விளாசி அதிர்ச்சி கொடுத்தது.

இதையடுத்து இந்திய வீரர்கள் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை கோலாக்கினர். பின்பு இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் இந்தியாவுக்கான 3 ஆவது கோலை பதிவு செய்தார். இதனையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா 3, ஜேர்மன் 3 கோல்கள் என சமநிலையில் இருந்தன.

இரண்டாம் பாதியில் இந்திய வீரர் ருபிந்தர் சிங் பால் அற்புதமான கோலை அடித்தார். இதனையடுத்து ஜேர்மன் வீரர் செய்த தவறால் இந்தியாவுக்கு பெனால்ட்டி ஸ்டோக் வாய்ப்பு கிடைத்தது. இதனை சிம்ரன்ஜீத் கவுர் எதிர்கொண்டு 5 ஆவது கோல் அடித்தார்.

ஆனாலும் போட்டியில் தொடர்ந்து சளைக்காமல் விளையாடிய ஜேர்மன் அணியினர் இரண்டாவது பாதியில் மற்றொரு கோலை பதிவு செய்தனர். இந்தியா தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடி ஆட்ட நேர முடிவு வரை ஜேர்மனியின் கோல் போடும் முயற்சியை தடுத்தனர்.

போட்டி முடிய வெறும் 6 நிமிடங்கள் இருந்த நிலையில் ஜேர்மனுக்கு ஒரு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய அணி வீரர்கள் அந்த வாய்ப்பை கச்சிதமாக முறியடித்தனர்.

இறுதி நேர முடிவில் 5-4 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று. ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்று சாதனை படைத்தது.

ஒலிம்பிக் ஹொக்கியில் ஒரு காலத்தில் முன்னணி அணியாக வலம் வந்த இந்திய அணி 8 தங்கம் உள்ளிட்ட 11 பதக்கங்களை வென்றுள்ளது.

இறுதியாக 1980ஆம் ஆண்டு மொஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றது. அதன்பின் 41 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் இந்திய ஆண்கள் ஹொக்கி அணியால் ஒரு பதக்கத்தைக் கூட வெல்ல முடியவில்லை.

ஆனால், தற்போது 41 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக வெண்கலப் பதக்கத்தை இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

அதேபோல, 49 ஆண்டுகளுக்குப் பின் இம்முறை ஒலிம்பிக்கில் அரை இறுதிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி பதக்கத்தோடு நாடு திரும்புகிறது.