Photo: BCCI Twittet
பயிற்சியின் போது பந்து தாக்கி காயமடைந்த இந்திய வீரர் மயங்க் அகர்வால் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (04) நொட்டிங்ஹமில் ஆரம்பமாகிறது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மயங்க் அகர்வால் காயமடைந்துள்ளார்.
வலைப் பயிற்சியின் போது வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் பவுன்சராக வீசிய பந்து அவரது ஹெல்மெட்டை பலமாக பதம் பார்த்தது. பந்து தாக்கிய வேகத்தில் தலைக்குள் அதிர்வு இருப்பதாக உணர்ந்ததால், அவருக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் தாக்கம் இருப்பதால் முதலாவது டெஸ்டில் மயங்க் அகர்வால் விளையாடமாட்டார் என்று இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஏற்கனவே காயத்தால் சுப்மான் கில் இந்தியா திரும்பிய நிலையில், மயங்க் அகர்வாலும் தற்போது காயமடைந்திருப்பதால் ரோஹித் சர்மாவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெரும்பாலும் கே.எல் ராகுல் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.