July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 கிரிக்கெட்டில் முதல் முறையாக அவுஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது பங்களாதேஷ்

Photo: Bangladesh Cricket Website

அவுஸ்திரேலிய அணி பங்களாதேஷ் சுற்றுப்பயணம் செய்து 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 போட்டி நேற்று (03) டாக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணியின் சகிப் அல் ஹசன் 36 ஓட்டங்களையும், மொஹமட் நயீம் 30 ஓட்டங்களையும் எடுத்தனர்.

அவுஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 132 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆனால் பங்களாதேஷ் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் அவுஸ்திரேலியா திணறியது.

இறுதியில், அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 108 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இதனால் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் டி-20 வரலாற்றில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் வெற்றியை, பங்களாதேஷ் அணி பதிவு செய்துள்ளது.

சுழல்பந்து வீச்சில் மாயாஜாலம் நிகழ்த்தி 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய நஸீம் அஹமட் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் பங்களாதேஷ் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.