January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒலிம்பிக்: 400 மீட்டர் தடை தாண்டல் ஓட்டத்தில் அமெரிக்கா வீராங்கனை உலக சாதனை!

Photo: Tokyo Olympic Twitter

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 12ஆவது நாள் போட்டி நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வருகின்றது.

இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியை 51.46 செக்கன்களில் கடந்து புதிய உலக சாதனையுடன் அமெரிக்காவின் சிட்னி மெக்லோக்லின் தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற அமெரிக்காவின் ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியை 51.90 செக்கன்களில் நிறைவுசெய்து உலக சாதனையை முறியடித்த 21 வயதான சிட்னி, மீண்டும் தனது சொந்த உலக சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.

அத்துடன், 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டத்தில் உலகிலேயே வேகமாக வீராங்கனை என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார்.

இதனிடையே, பெண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டலில் நடப்பு உலக சம்பியனும், 2016 ரியோ ஒலிம்பிக்கில தங்கப் பதக்கம் வென்றவருமான அமெரிக்காவின் டலிலாஹ் முஹம்மட் போட்டியை 51.58 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

எனவே, சிட்னி கடந்த ஜுன் மாதம் நிலைநாட்டிய உலக சாதனையை டலிலாஹ் முஹமட்டும் இந்தப் போட்டியில் முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஐரோப்பிய சாதனையுடன் நெதர்லாந்து வீராங்கனை பெம்கி போல் (52.03 செக்.) வெண்கபலப்ப பதக்கம் வென்றார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் நோர்வே வீரர் கார்ஸ்டன் வோர்ஹோல்ம், உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.