October 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோக்கியோ ஒலிம்பிக்: 400 மீட்டர் தடை தாண்டலில் நோர்வே வீரர் கார்ஸ்டன் உலக சாதனை

Photo: Tokyo 2020 Twittet

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று (03)நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியை 45.94 செக்கன்களில் கடந்து புதிய உலக சாதனையுடன் நோர்வே வீரர் கார்ஸ்டன் வோர்ஹோல்ம் தங்கப் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் தனது சொந்த உலக சாதனையை 0.76 மில்லி செக்கன்களால் முறியடித்து புதிய உலக சாதனையை அவர் நிலைநாட்டினார்.

முன்னதாக கடந்த மாதம் ஒஸ்லோவில் நடைபெற்ற டயமண்ட் லீக் மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியை 46.70 செக்கன்களில் நிறைவு செய்த அவர், 1992 பார்சிலோனா ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரர் கெவின் யங் நிலைநாட்டிய (46.78 செக்.) உலக சாதனையை 29 ஆண்டுகளுக்குப் பின் முறியடித்தார்.

எனவே தன்னுடைய உலக சாதனையை ஒரு மாத காலப்பகுதிக்குள் மீண்டும் கார்ஸ்டன் முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, அமெரிக்காவின் ராய் பென்ஞமின் போட்டியை 46.17 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.பிரேசிலின் அலிசன் டொஸ் சன்டோஸ், 46.72 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றதுடன்,தென்அமெரிக்காவின் சாதனையையும் முறியடித்தார்.

எனவே, இந்தப் போட்டியில் பங்கு கொண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற மூன்று வீரர்களும் 1992 இல் அமெரிக்கா வீரர் கெவின் யங் நிலைநாட்டிய (46.78 செக்.) ஒலிம்பிக் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டல் இறுதிப் போட்டியில் பங்கு கொண்ட எட்டு வீரர்களில் ஆறு பேர் உலக மற்றும் தமது நாடுகளின் தேசிய சாதனைகளை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.