July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச நண்பர்கள் தினத்தன்று ஒலிம்பிக் பதக்கத்தை பகிர்ந்து கொண்ட நண்பர்கள்

Photo: Tokyo Olympic & World Athletics Twitter

உலகம் முழுவதும் நேற்று (01) சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டதுடன், டோக்கியோ ஒலிம்பிக்கில் பறைசாற்றும் அரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

டோக்கியோ ஒலிம்பிக்கின் உயரம் பாய்தல் போட்டி நேற்று நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் கத்தாரின் முடாஸ் பர்ஷிம், இத்தாலியின் கியன்மார்கோ தம்பெரய் இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் இரண்டு வீரர்களும் 2.37 உயரத்தை தாவி ஒரே புள்ளிகளோடு இறுதிச் சுற்றை முடித்தனர்.அத்தோடு இரண்டு பேருமே ஒருமுறை கூட தங்கள் முயற்சியில் தோல்வி அடையவில்லை.

அதேபோல், 2.39 மீட்டர் உயரத்தையும் எந்த தடங்கலும் இன்றி வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இரண்டு பேருமே இதில் மூன்று முறை தவறு செய்தனர். இதனால் இரண்டு பேருக்குமே ஒரே அளவில் புள்ளிகள் கொடுக்கப்பட்டது. அதன்பின் போட்டி நடுவர் இவர்களுக்கு இடையில் டைபிரேக்கர் நடத்த முடிவு செய்தார்.

கடைசியாக ஒருமுறை இருவருக்கும் மற்றுமொரு உயரத்தை கொடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க முடிவு செய்தார். ஆனால், ஒலிம்பிக் நடுவருக்கு முடாஸ் பர்ஷும் மற்றும் கியான்மார்க்கோ இடையே இருக்கும் நட்பு பற்றி தெரியாது. இரண்டு பேருமே நீண்ட நாள் நண்பர்கள்.

அத்தோடு கியான்மார்க்கோவிற்கு 2016 இல் காலில் காயம் ஏற்பட்ட போது அவருக்கு உறுதுணையாக இருந்து, அவர் மீண்டும் ஒலிம்பிக்கில் பங்குபற்றுகின்ற அளவிற்கு உறுதுணையாக இருந்தது முடாஸ் பர்ஷிம் தான். இரண்டு பேருமே இரண்டு வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும் உயரம் பாய்தல் என்ற மேடையில் இரண்டு பேருமே நண்பர்களாகவே திகழ்ந்தார்கள்.

முடாஸ் பர்ஷிமின் உதவி இல்லை என்றால் என்னுடைய விளையாட்டு வாழ்க்கையே முடிவிற்கு வந்து இருக்கும் என்று கியான்மார்க்கோ முன்னதாக குறிப்பிட்டு இருக்கிறார்.அந்த அளவிற்கு இவர்கள் நெருக்கமான நண்பர்கள்.

இந்த நிலையில் தான் நேற்று நடைபெற்ற உயரம் பாய்தலில் இரண்டு பேரும் சம அளவு உயரத்தை தாவியதன் காரணத்தால் டை பிரேக்கருக்கு செல்ல நடுவர் இரண்டு வீரர்களையும் அழைத்து பேசினார்.

நடுவர் விதிமுறைகளை சொல்லும்போது, அவரிடம் குறுக்கிட்ட முடாஸ், நாங்கள் தங்கப் பதக்கத்தை பகிர்ந்து கொள்ளலாமா, எங்கள் இரண்டு பேருக்கும் தங்கப் பதக்கம் கொடுக்க உயரம் பாய்தல் விதிமுறையில் இடம் இருக்கிறதா என்று கேட்டார். இந்த கேள்வியை நடுவர் எதிர்பார்க்கவில்லை.ஏன் தனது நண்பர் கியான்மார்க்கோவும் இதை எதிர்பார்க்கவில்லை.

திடீரென பதில் அளித்த நடுவர்,ஆம் இரண்டு பேருக்கும் தங்கம் கொடுக்க முடியும் என்று கூறிவிட்டு நடுவர் தலை அசைத்தார். இரண்டு பேருமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கத்தார், இத்தாலி ஆகிய இரண்டு நாடுகளுக்கும் தனி தனியாக தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை கேட்டவுடன் கியான்மார்க்கோவும், முடாஸ் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். ஒலிம்பிக்கில் பொதுவாக வீரர்களுக்கு இடையே நட்பு, இணக்கம் இருந்தாலும் கூட இது போன்ற சம்பவங்கள் நடப்பது அரிது.

நேற்று சர்வதேச நண்பர்கள் தினத்தின் போது இரண்டு நண்பர்கள் தங்கள் விருதை, அதிலும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டது உலகம் முழுக்க இருக்கும் விளையாட்டு ரசிகர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கொண்டாடிய வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.