November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒலிம்பிக் பெட்மிண்டன்; இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

Photo: Badminton World Federation Twitter

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஒற்றையர் பெட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக்கில் பெண்களுக்கான பெட்மிண்டன் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நேற்று (01)நடைபெற்றது. இதில் இந்தியாவின் பி.வி.சிந்து – சீனாவைச் சேர்ந்த ஹி பின்ஜியா (He Bingjiao)  ஆகியோர் மோதினர்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் செட்டை 21-13 என்று எளிதாக கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர்.

பி.வி.சிந்து புள்ளிகளில் முன்னிலை பெற்றாலும் ஹி பின்ஜியா நெருங்கி வந்தார். இதனால் இரண்டாவது செட் விறுவிறுப்பாக சென்றது. ஆனால் அற்புதமாக விளையாடிய பி.வி.சிந்து 21 – 15 என்ற கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தினார். இதனையடுத்து டோக்கியோ ஒலிம்பிக் பெட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

2016 இல் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து இம்முறை தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கின் அரை இறுதிப் போட்டியில் சிந்து தோல்வியடைந்தார்.

எது எவ்வாறாயினும், இந்தியாவுக்காக தனி நபர் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று கொடுத்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை பி.வி.சிந்து படைத்துள்ளார்.