July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணத்தை இலக்கு வைத்து இலங்கை வீரர்களுக்கு புதிய கிரிக்கெட் தொடர்

தென்னாபிரிக்காவுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள இருவகை கிரிக்கெட் தொடர்கள் மற்றும் ஐ.சி.சி.யின் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் ஆகியவற்றுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்களை தயார் செய்யும் பொருட்டு அழைப்பு டி-20 லீக் சுற்றுப் போட்டி ஒன்றை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை அணி வீரர்களும், உள்ளூர் முதல்தர கிரிக்கெட் வீரர்களும் இந்த டி-20 லீக் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ளனர்.

‘SLC invitation T20 League’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரிக்கெட் போட்டியில் ப்ளூஸ், ரெட்ஸ், க்றீன்ஸ், கிரேஸ் ஆகிய பெயர்களிலான நான்கு அணிகள் பங்குபற்றவுள்ளன. இந்த நான்கு அணிகளிலும் தலா 15 வீரர்கள் இடம்பெறுவர்.

கண்டி, பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் இப் போட்டி ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. போட்டிகள் நடைபெறும் தினங்களில் முதலாவது போட்டி பிற்பகல் 2.30 மணிக்கும் இரண்டாவது போட்டி இரவு 7.00 மணிக்கும் ஆரம்பமாகும்.

லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் 3 போட்டிகளில் விளையாடுவதுடன், மொத்தம் 6 போட்டிகள் நடத்தப்படும். லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் ஆகஸ்ட் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறும்.

அழைப்பு இருபது 20 கிரிக்கெட் போட்டியில் அதி சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தும் வீரர்களே தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அதேபோல, தென்னாபிரிக்காவுக்கு எதிரான இருவகை தொடர்களில் குறிப்பாக டி-20 கிரிக்கெட் தொடரில் அதிகபட்ச ஆற்றல்களை வெளிப்படுத்தும் வீரர்கள் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.