January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோக்கியோ ஒலிம்பிக்: உலகின் அதிவேக வீரராக இத்தாலியின் ஜேகப்ஸ் தெரிவானார்

Photo: Tokyo Olympic Twitter

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இத்தாலியின் லெமொன்ட் மார்ஷெல் ஜேகப்ஸ் முதலிடத்தை பெற்று உலகின் அதிவேக வீரராக தெரிவாகினார்.

கடந்த மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார். எனினும், இம்முறை ஒலிம்பிக்கில் உசைன் போல்ட் இல்லாத நிலையில்,ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் யாருக்கு தங்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

அதேபோல, ஏழு ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டியில்  ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த எந்தவொரு வீரர்களும் இடம்பெறவில்லை.

இதன்படி, இன்று (01) மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த ஜேகப்ஸ் 9.80 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

125 ஆண்டு ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக உலகின் அதிவேக வீரராக இத்தாலி நாட்டைச் சேர்ந்த  மார்ஷெல் ஜேகப்ஸ் மகுடம் சூடினார்.

இதன்மூலம், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இத்தாலியின் தேசிய சாதனை மற்றும் ஐரோப்பிய சாதனைகளை முறியடித்த ஜேகப்ஸ், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதுமாத்திரமின்றி, இவர் இத்தாலியின் முன்னாள் நீளம் பாய்தல் சம்பியன் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, 2016 ரியோ ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய அமெரிக்க வீரர் பிரெட் கேர்லி, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.இவர் போட்டித் தூரத்தை 9.84 செக்கன்களில் நிறைவு செய்தார்.

இதனிடையே, கனடாவின் அன்ட்ரி டி கிரேஸ் (9.89 செக்கன்கள்) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.

இதனிடையே, இம்முறை ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பதக்கம் வெல்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜமைக்காவின் யொஹான் பிளேக் மற்றும் ட்ரெவின் ப்ரோமல், தென்னாபிரிக்காவின் சிம்பினி, அமெரிக்காவின் ரொன்னி பாக்கர் ஆகிய வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.