July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோக்கியோ ஒலிம்பிக்: கலப்பு தொடர் நீச்சலில் அமெரிக்கா அணி உலக சாதனை

Photo: Team USA Twitter

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான 4×100 மீட்டர் கலப்பு (Medley) தொடர் நீச்சலில் அமெரிக்கா அணி புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32 ஆவது கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

இன்று (01) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 4×100 மீட்டர் மெட்லி (கலப்பு) தொடர் நீச்சலில் அமெரிக்கா அணி புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றது.

ரையன் மெர்பி, அன்ட்ரூ மைக்கல், கெலிப் டிரெஸ்சல், செக் எப்பல் ஆகியோர் அடங்கிய அமெரிக்கா அணி போட்டித் தூரத்தை 3 நிமிடங்கள் 26.78 செக்கன்களில் கடந்தது.

இதற்கு முன்பு 2009 இல் மைக்கல் பெல்ப்ஸ் தலைமையிலான அமெரிக்கா 3 நிமிடங்கள் 27.28 செக்கன்களில் கடந்ததே சாதனையாக இருந்தது.

இந்தப் போட்டியில் பிரித்தானியாவுக்கு வெள்ளிப் பதக்கமும், இத்தாலிக்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன.

கடந்த 24 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 9 நாட்கள் நடைபெற்று வந்த டோக்கியோ ஒலிம்பிக்கின் நீச்சல் போட்டிகள் அனைத்தும் இன்று (01) நிறைவுக்கு வந்தன.

இதன்படி, நீச்சல் போட்டியில் 11 தங்கப் பதக்கங்ளை வென்ற அமெரிக்கா முதலிடத்தையும், 9 தங்கப் பதக்கங்களை வென்ற அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், 4 தங்கப் பதக்கங்களை வென்ற பிரித்தானியா மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டன.