July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மெண்டிஸ்,டிக்வெல்ல,குணதிலக்கவுக்கு ஓராண்டு போட்டித் தடை; ஒரு கோடி ரூபா அபராதம்

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் வைத்து கொவிட்-19 கட்டுப்பாட்டு வலய விதிமுறையை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட்ட, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு போட்டித் தடை விதிக்க இலங்கை கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்ட ஒழுக்காற்று குழு நேற்றைய தினம் (29) பரிந்துரைத்திருந்தது.

அதன்படி, இலங்கை கிரிக்கெட் சபையானது, தேசிய அணி மற்றும் வீரர்களின் எதிர்காலம் தொடர்பில் கருத்திற் கொண்டு, இந்த வீரர்கள் மூவருக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாட 6 மாதம் போட்டித் தடை உட்பட, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஒரு வருட போட்டித் தடையும், 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபா அபராதமும் விதித்துள்ளது.

அதுமாத்திரமின்றி, மேற்குறித்த மூவரும்  எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதிக்குள் இலங்கை கிரிக்கெட் சபையின் விதிமுறைகளை மீறி செயற்பட்டால், மேலும் ஒரு வருடத்துக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, இலங்கை கிரிக்கெட்டினால் பரிந்துரை செய்யப்படும் வைத்தியர் ஒருவரிடம் கட்டாயமாக ஆலோசனை பெறுமாறும் குறித்த மூவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தடையின் காரணமாக, இலங்கை அணி இந்த வருடம் விளையாடவுள்ள ஐ.சி.சி.யின் டி-20 உலகக் கிண்ணத்தில், நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் விளையாடுவதற்கான தகுதியை இழந்துள்ளனர்.