photo-srilankacricket.lk
இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான டி 20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடியது. 2 போட்டிகள் முடிந்த நிலையில்,இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்த நிலையில்,இரு அணிகளும் 3-வது மற்றும் கடைசி போட்டியில் வியாழக்கிழமை(29)மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.கெய்க்வாட் 14 ஓட்டங்கள் எடுத்தார்.அதன் பின்னர் களமிறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 36 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 23 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல் எடுத்தார்.இதனால் இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 81 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்க 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.தசுன் சானக 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையடுத்து 82 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்க பெர்னாண்டோ 12 ஓட்டங்களும் ,பானுக 18 ஓட்டங்களும் சமரவிக்ரம 6 ஓட்டமும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில்,இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 82 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.தனஞ்செய டி சில்வா 23 ஓட்டங்களும் ஹசரங்க 14 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதன்மூலம் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், இந்தியாவுக்கு எதிரான டி 20 தொடரை 2-1 என கைப்பற்றியது.