இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது கொவிட்-19 கட்டுப்பாட்டு வளையத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்களுக்கும் வழங்கப்படவுள்ள போட்டித் தடை, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதில் இரண்டு வீரர்களுக்கு 2 ஆண்டுகள் போட்டித் தடையும், ஒரு வீரருக்கு 18 மாதங்கள் போட்டித் தடையும் விதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீரர்கள் தொடர்பிலான விசாரணை இலங்கை கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய ஒழுக்காற்றுக் குழு முன்னிலையில் இன்று (29) கிரிக்கெட் சபை தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதன்படி, விசாரணைகளின் முடிவில் இலங்கை அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க ஆகிய இருவருக்கும் இரண்டு ஆண்டுகள் போட்டித் தடையும், விக்கெட் காப்பாளர் நிரோஷன் டிக்வெல்லவுக்கு ஒன்றரை வருடங்கள் போட்டித் தடையும் விதிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த மூன்று வீரர்களுக்கு 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அபராதமாக விதிப்பதற்கும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனினும், குறித்த தண்டனைகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
குறித்த வீரர்கள் மூவரும், இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் போது டர்ஹமில் உள்ள வீதிகளில் சுற்றித் திரியும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் அணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.