July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோக்கியோ ஒலிம்பிக்: நீச்சல் போட்டியில் இலங்கை வீரர் மெத்யூ தோல்வி

Photo: NOC of Sri Lanka

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீட்டர் சாதாரண நீச்சல் (ப்ரீ ஸ்டைல்) போட்டியின் தகுதிச் சுற்றில் பங்கு கொண்ட இலங்கை வீரர் மெத்யூ அபேசிங்க 8 ஆவது இடத்தை  பெற்றுக் கொண்டார்.

இதன்படி, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கை சார்பில் பங்கு கொண்ட 9 பேரில் 8 ஆவது வீரராக மெதிவ் அபேசிங்க ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

டோக்கியோ நீர் நிலை நீச்சல் தடாகத்தில் ஆண்களுக்கான 100 மீட்டர் சாதாரண நீச்சலுக்கான 9 தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் நான்காவது தகுதிச் சுற்றில் இலங்கை வீரர் மெத்யூ அபேசிங்க போட்டியிட்டார்.

எட்டு வீரர்கள் பங்குபற்றிய இப் போட்டியின் முதல் 50 மீட்டர் தூரத்தை 23.47 செக்கன்களில் முதலாவது வீரராக நிறைவு செய்த மெதிவ், கடைசி 30 மீட்டரில் துரதிஷ்டவசமாக பின்னடைவை சந்தித்தார்.

இதன்படி, போட்டியை 50.62 செக்கன்களில் நிறைவு செய்த மெத்யூ அபேசிங்க எட்டாவது இடத்தை பெற்றார்.

இதன்படி, 71 வீரர்கள் பங்குபற்றிய 9 தகுதிகாண் போட்டிகள் முடிவில் ஒட்டுமொத்த நிலையில் 48 ஆவது இடத்தை மெதிவ் அபேசிங்க பெற்றார்.

அமெரிக்காவில் நீண்ட காலமாக பயிற்சி பெற்று வருகின்ற மெத்யூ அபேசிங்க, இதுவரை ஒன்பது தேசிய நீச்சல் சாதனைகளை முறியடித்துள்ளார்.

2016 இல் அசாமில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்காக ஏழு தங்கப் பதக்கங்களை வென்று கொடுத்த அவர், 2019 நேபாளத்தில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் 7 தங்க  பதக்கங்களை சுவீகரித்தார்.