
சுற்றுலா இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இன்று (27) நடைபெறவிருந்த இரண்டாவது டி-20 போட்டி நாளை புதன்கிழமைக்கு (28) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் குர்னால் பாண்டியாவுக்கு கொவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.அத்துடன், குர்னால் பாண்டியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 8 நபர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,இன்றைய தினம் (27) ஏனைய வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொவிட்-19 தொற்று பரிசோதனையில், வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என உறுதியாகும் பட்சத்தில் நாளைய தினம் (28) இரண்டாவது டி-20 போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு அணிகளுக்குமிடையிலான தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேண்ட் பிளவர் கொவிட்-19 தொற்றுக்கு முகங் கொடுத்திருந்தமையால், தொடர் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய போட்டி அட்டவணை
2வது டி 20 போட்டி – ஜூலை 28
3வது டி 20 போட்டி – ஜூலை 29