Photo: Tokyo Olympic Twitter
டோக்கியோ ஒலிம்பிக்கில் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்ட பெண்களுக்கான ஸ்கேட்போர்டிங் போட்டியில் ஜப்பானின் 13 வயது இளம் வீராங்கனை மோமிஜி நிஷியா தங்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.
இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் தங்கம் வென்ற மூன்றாவது வீராங்கனையாக அவர் இடம்பிடித்தார்.
தங்கம் வென்ற போது அவரது வயது 13 வருடங்கள், 330 நாட்களாகும். அதேவேளை, மிகக் குறைந்த வயதில் ஜப்பானுக்கு ஒலிம்பிக் தங்கம் வென்று கொடுத்தவர் என்ற சாதனைக்கு நிஷியா உரித்தானார்.
முதலிரண்டு இடங்களில் அமெரிக்க ‘டைவிங்’ வீராங்கனை மார்ஜோரி ஜெஸ்ட்ரிங் (13 வருடங்கள், 268, 1936 பேர்லின் ஒலிம்பிக்), ஜேர்மனி படகு போட்டி (‘காக்ஸ் பேர்ஸ்’) வீரர் கிளாஸ் ஜெர்டா (13 வருடங்கள், 283 நாட்கள், 1960 ரோம் ஒலிம்பிக்) உள்ளனர்.
ஏரியேக் பார்க்கில் நடைபெற்ற பெண்களுக்கான ஸ்கேட்போர்டிங் போட்டியில் 7 வீராங்கனைகள் பங்கு பற்றியிருந்ததுடன், மொத்தமாக 15.26 புள்ளிகளை பெற்று நிஷியா தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இந்தப் போட்டியில் பிரேசிலைச் சேர்ந்த 13 வருடங்கள், 203 நாட்கள் வயதுடைய ரேசா லீல் 2.31 புள்ளிகள் வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒருவேளை இவர் வெற்றி பெற்றிருந்தால் ஒலிம்பிக் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் தங்கம் வென்றவர் என்ற சாதனையை தனதாக்கிக் கொண்டிருப்பார்.
இதனிடையே, இப்போட்டியில் 16 வயதுடைய ஜப்பான் வீராங்கனை ஃபியூனா நக்காயாமா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
எனவே, ஒலிம்பிக் வரலாற்றில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை ஒரே போட்டியில் வென்ற இளவயது வீரர்கள் என்ற பெருமையையும் இந்த வீராங்கனைகள் பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக ஆண்களுக்கான அங்குரார்ப்பண ஒலிம்பிக் ஸ்கேட்போர்டிங் போட்டியிலும் ஜப்பான் தான் முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.