இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதலாவது டி-20 போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந் துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா, ப்ரித்வி ஷா போன்ற வீரர்கள் ஏமாற்றம் கொடுத்தாலும், சூர்ய குமார் யாதவ் 50 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 46 ஓட்டங்களையும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை இந்திய அணி எடுத்தது.
இலங்கை அணியின் பந்து வீச்சு சார்பில் துஷ்மன்த சமீர மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.
இதனையடுத்து 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் சரித் அசலங்க (44), அவிஷ்க பெர்னாண்டோ (26) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
இறுதியில் 18.3 ஓவர்களில் 126 ஓட்டங்களை எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இலங்கை அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார் தெரிவாகினார்.
இரண்டு அணிகளும், மோதும் டி-20 தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) நடைபெறவுள்ளது.