January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோக்கியோ ஒலிம்பிக்:அவுஸ்திரேலிய பெண்கள் நீச்சல் அணி உலக சாதனை

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் முதலாவது உலக சாதனையை அவுஸ்திரேலியாவின் பெண்கள் நீச்சல் அணி நிலை நாட்டியது.

அத்துடன், இம்முறை ஒலிம்பிக்கில் அவுஸ்திரேலியா வென்ற முதலாவது தங்கப் பதக்கமும் இதுவாகும்.

டோக்கியோ நீர் நிலை தடாகத்தில் இன்று (25) காலை நடைபெற்ற பெண்களுக்கான 4X100 மீட்டர் சாதாரண (ப்ரீஸ்டைல்) தொடர் நீச்சல் போட்டியை 3 நிமிடங்கள் 29.69 செக்கன்களில் நிறைவு செய்து தனது சொந்த உலக சாதனையையும், ஒலிம்பிக் சாதனையையும் அவுஸ்திரேலியா புதுப்பித்தது.

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற 2018 பொது நலவாய விளையாட்டு விழாவில் அவுஸ்திரேலியாவினால் நிலை நாட்டப்பட்டிருந்த 3 நிமிடங்கள் 30.05 செக்கன் என்ற உலக சாதனையே இன்று(25) முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதுமாத்திரமன்றி, கோல்ட் கோஸ்டில் உலக சாதனை நிலைநாட்டிய அணியில் இடம்பெற்ற மூன்று வீராங்கனைகள் புதிய உலக சாதனை நிலைநாட்டிய அணியில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.

கெம்பல் ப்ரொன்டே (53.01 செக்.), ஹரிஸ் மெக் (53.09 செக்.), மெக்கியொன் எம்மா (51.35 செக்.), கெம்பல் கேட் (52.24 செக்) ஆகிய நால்வரே ஒலிம்பிக்கில் உலக சாதனை நிலை நாட்டியவர்களாவர்.

அவர்களில் ப்ரொன்டே, கேட் ஆகியோர் கூடப் பிறந்த சகோதரிகளாவர். கோல்ட் கோஸ்ட் அணியில் இடம்பெற்ற ஷய்னா ஜெக் ஒலிம்பிக் அணியில் இடம்பெறவில்லை.அவருக்கு பதிலாக ஹரிஸ் மெக் இடம்பெற்றார்.

இப் போட்டியில் கனடா (3:32.78) வெள்ளிப் பதக்கத்தையும், ஐக்கிய அமெரிக்கா (3:32.81) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

நீச்சல் போட்டியில் அமெரிக்காவுக்கு இன்று முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லி பிரிவில் அந்நாட்டு வீரர் சேஸ் கலிஸ் தங்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரர் வெள்ளியும், அவுஸ்திரேலிய வீரர் வெண்கலமும் பெற்றனர்.

இதேநேரம், ஆண்களுக்கான 400 மீட்டர் தனி நபர் பிரீஸ்டைலில் டியுனிசியாவின் ஹப்நொய் அஹ்மட்டும், பெண்களுக்கான 400 மீட்டர் தனி நபர் மெட்லி பிரிவில் ஜப்பானின் யூய் ஒஹாசியும் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர்.